- Home
- Tamil Nadu News
- பொங்கல் பரிசு ரூ.3,000 யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது? ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!
பொங்கல் பரிசு ரூ.3,000 யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது? ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு யாருக்கு கொடுக்க வேண்டும்? பணத்தை எப்படி கொடுக்க வேண்டும்? என்று குறித்து அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பொங்கல் பரிசு ரூ.3,000
தமிழக அரசு ரேஷன் அரிசி பெறும் அனைத்து அட்டைத்தாதரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் ரொக்க தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.
கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்
பொங்கல் பரிசை மக்கள் எளிதாக பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பரிசை மக்களுக்கு சிரமமின்றி வழங்கும் வகையில் 1,500-க்கு மேல் மற்றும் 2 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்?
மேலும் முதல் நாள் முற்பகல் 100 பேருக்கும். பிற்பகல் 100 பேருக்கும், 2-ம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கும் என வழங்க வேண்டும். குடும்ப அட்டைத்தாரர்கள் பரிசு தொகுப்பு பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிட்டு டோக்கன்கள் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று கடை பணியாளர்கள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும்.
மேலும் தெரு வாரியாக வினியோகம் செய்யப்படும் விவரம் கடைகளின் முன்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
விரல் ரேகை சரிபார்ப்பு மூலமே பணம்
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை ரேஷன் கடைகளின் விற்பனை முனைய எந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இதர நபர்களிடம் (இணைய வழியாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி நபர்கள் நீங்கலாக) வழங்குவதற்கு அனுமதியில்லை.
ஒருவேளை தொழில்நுட்ப காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரங்களில் அதற்குரிய பதிவேட்டில் உரிய கையெழுத்து பெற்று வழங்க வேண்டும் எனவும் ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணத்தை எப்படி வழங்க வேண்டும்?
மேலும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ.3,000 வழங்கும்போது ரேஷன் கடை பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக வழங்கக்கூடாது. பயனாளிகளின் முன்பே நோட்டுக்களை எண்ணி பயனாளிகளின் கைகளிலேயே வழங்க வேண்டும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகையை தகுதியானவர்கள் அனைவருக்கும் விடுதலின்றி வழங்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது.
யாருக்கெல்லாம் ரூ.3,000 கிடையாது?
ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சர்க்கரை மட்டும் வாங்கும் வெள்ளை நிற அட்டைதாரர்களுக்கு (White/Sugar Cards) பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடையாது. ரேஷனில் எந்தப் பொருளும் வாங்காமல் வெறும் அடையாள சான்றுக்காக மட்டும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடையாது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களில் ஒரு பிரிவினர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

