ரூ.3,000 ரொக்கம் + பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

தமிழக அரசு பொங்கல் பரிசு 2026
தமிழகத்தில் வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த ரொக்க உதவி, வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 3000
இதற்கு முன்பு, பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த பரிசுத் தொகுப்புக்காக தமிழக அரசு ரூ.248 கோடி ஒதுக்கியது. ஆனால் ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, ரொக்க உதவி வழங்குவது குறித்து நிதித்துறையுடன் முதல்வர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசு அறிவிப்பு
கடந்த ஆண்டு பொங்கலின் போது ரொக்க உதவி வழங்கப்படாமல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது, மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலையும் கருத்தில் கொண்டு, ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.6,936 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழர் முகாம் பொங்கல் பரிசு
இந்தப் பொங்கல் ரொக்கப் பரிசுத் திட்டம், தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமல்லாமல், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருந்தும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

