இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஆழித்தேர் வடிவில் உருவாக்கப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ கலைஞர் இன்னும் வாழ்கிறார்.. ஏன் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக இந்த கோட்டம் இன்று கம்பீரமாக அமைந்திருக்கிறது. எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு, அது திறக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை, என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே நான் இதை நிறுவுகிறேன்.
கலைஞரின் பன்முக பரிணாமங்களை சொல்லக்கூடிய கருவூலம் தான் இந்த கலைஞர் கோட்டம். திருவாரூர் தேர் அழகு என்பார்கள், அந்த உருவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரை நாடு போற்றும் தலைவராக ஆக்கிய ஊர் இந்த திருவாரூர். திருவாரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்ட மக்கள் பிரம்மாண்ட திருமணம் மற்றும் விழாக்கள் நடத்தும் வகையில் இந்த கோட்டத்தில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி கைது: அதிமுக மாஜிக்களுக்கு இறுகும் பிடி? ஸ்டாலின் கணக்கு?
அரங்கும் அமைப்பது கூட எளிது. அதை பராமரிப்பது தான் சிரமம். எனவே சிரமம் பார்க்காமல் அதை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று, நான் கலைஞர் தலைமையிலான அரசை தான் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன். எந்த சம்பவம் நடந்தாலும், கலைஞர் இருந்தால் என்ன முடிவெடுப்பார் என்று யோசித்து நான் முடிவெடுத்து வருகிறேன். அதனால் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறேன். இந்தியாவில் ஜனநாயகம் எப்போதெல்லாம், நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறதோ அப்போதெல்லாம், இந்திய தலைவராக தனது எல்லையை விரித்து வந்தார் கலைஞர். கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வர முடியவில்லை.

பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி வந்திருக்கிறார். அவருக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர் தான் கொடியேற்ற வேண்டும் என்ற பெருமையை பெற்று தந்தவர் கலைஞர். ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ என்று சொன்னவர் கலைஞர். பாஜக கடந்த 10 ஆண்டுளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்திய ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால், 4000 ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.
இந்த கலைஞரின் உடன்பிறப்புகள் இதை செய்யாவிட்டால், வேறு யாராலும் இதை செய்ய முடியாது. மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் தமிழினத்திற்கும், இந்தியாவிற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழ்நாட்டில் எப்படி ஒற்றுமையாக செயல்படுகிறமோ, அத்தகைய செயல்பாடு இந்திய அளவில் ஏற்பட வேண்டும். வெற்றி வேண்டும், அதற்கு முன்பு ஒற்றுமை வேண்டும். இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம். நாற்பதும் நமதே.. நாடும் நமதே” என்று தெரிவித்தார்.
பாஜகவின் பி டீம் நான் அல்ல; என்னுடைய மறு உருவம் தான் பாஜக - சீமான் விளாசல்
