செந்தில் பாலாஜி கைது: அதிமுக மாஜிக்களுக்கு இறுகும் பிடி? ஸ்டாலின் கணக்கு?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நிலுவையில் இருக்கும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இது தொடர்பாக, ஆளுநரிடம் நேரில் சென்று புகார் அளித்தும் பயனில்லை. இதையடுத்து, சட்டமன்றத் தேர்தல் பிரசாரங்களின்போது, ஊழல் செய்த அதிமுக அமைச்ச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் சூளுரைத்தார்.
அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலே மாசம் ஒரு மாஜி என்பது போல, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகள் பாய்ந்தன. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கொடநாடு வழக்கு தூசி தட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த சோதனைகள் வெறும் சோதனையாக மட்டுமே இருந்தது. எவ்வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சோதனைகளுக்கு பிறகு வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இது ஆளுங்கட்சியான திமுக மீது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நிலுவையில் இருக்கும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சிவீரமணி உள்ளிட்ட பலரது மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து விசாரிக்கையில், “திமுக வீக்காக இருந்த கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை மீட்டெடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கொங்கு பெல்ட் என்பது பாஜகவுக்கு வாக்குவங்கி இருக்கும் இடம். அதிமுகவின் செல்வாக்கும் செந்தில் பாலாஜி வருகைக்கு பின்னர் குறையத் தொடங்கியுள்ளது. எனவே, மக்களவை தேர்தல் நெருங்குவதால் அவரை பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கலாம். இந்த பின்னணியில் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைகள் எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என திமுக நினைக்கிறது. அவரது கைது நடவடிக்கையை பாஜகவை விட அதிமுகவினர் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். மத்தியில் பாஜக இருப்பதால், அவர்கள் மீது வழக்குகளை கையில் எடுப்பது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை. எனவே, அதிமுகவினர் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவர்களுக்கு செக் வைத்தால், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் என திமுக தலைமை நினைக்கிறது.” என்கின்றனர் விரிவாக. அதேசமயம், தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவினர் மீதான வழக்குகளை தூசி தட்டினால், அதனை பழிவாங்கும் நடவடிக்கை என அவர்கள் திருப்பி விடக்கூடும். இது எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தி விடவும் வாய்ப்புள்ளது என்பதால் அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.