முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இங்கு இருந்திருந்தால் அப்துல்கலாம் நினைவு சின்ன பணிகளை வெகுவாக பாராட்டியிருப்பார் எனவும், ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி நண்பர்களே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.

புனித தலமான ராமேஷ்வரம் நான் வந்திருப்பது மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். அப்துல் கலாமால் இந்த ராமேஷ்வரம் மீண்டும் புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது என தெரிவித்தார்.  

ராமேஷ்வரம் மதத்தின் மையமாக இல்லை. ஆன்மீகபூமியாக திகழ்கிறது எனவும், இங்கு விவேகானந்தர் 1897 ல் கால்பதித்தார் எனவும் குறிப்பிட்டார்.  

இந்த பூமி மகத்தான விஞ்ஞானியான அப்துல்கலாமை நமக்கு தந்திருப்பதாகவும், அப்துல்கலாம் அமைதியான ஆழமான சிந்தனையாளராக இருந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

அவரிடம் வாக்குறுதி தந்ததுபோல் மிகவிரைவில் அவருக்கு நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்காக வெங்கையா தலமையில் குழு அமைக்கப்பட்ட்தாகவும் மோடி தெரிவித்தார்.

அப்துல்கலாமின் சிந்தனை எழுச்சியை குறுகிய காலத்தில் பணியாளர்கள் நிறுவியிருக்கிறார்கள் எனவும், கலாமின் நினைவு சின்னம் வருங்கால தலைமுறைக்கு எழுச்சியை தரும் எனவும் பேசினார்.

இந்த பணியை செய்த ஒவ்வொரு பணியாளர்களுக்கு தனது வணக்கங்களை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இங்கு இருந்திருந்தால் இந்த நினைவு சின்ன பணிகளை வெகுவாக பாராட்டியிருப்பார் எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா இல்லாததை இங்கு வருத்தமாக உணர்கிறேன் எனவும், ராமேஷ்வரம் வரும் மக்கள் கண்டிப்பாக அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை பார்வையிட வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.