அரசூர்,
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமில்லாத சாப்பாட்டை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சத்துணவு ஊழியர்களுக்கு, தாசில்தார் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தில் நேற்று திருக்கோவிலூர் தாசில்தார் நளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவை தாசில்தார் நளினி சாப்பிட்டுப் பார்த்தார்.
அந்த உணவு தரமில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து தாசில்தார் நளினி பள்ளி மாணவ - மாணவிகளிடம் சத்துணவு குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
அப்போது மாணவர்கள் “சத்துணவு மையத்தில் முட்டை சரியான முறையில் வழங்கப்படுவது இல்லை” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாசில்தார் நளினி, அங்கிருந்த சத்துணவு ஊழியர்களிடம் மாணவர்களுக்கு தரமான சாப்பாட்டை வழங்கக வேண்டும். இனி தரமற்ற உணவை வழங்கக் கூடாது.
மேலும் முட்டைகளை சரியான முறையில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் நீலவேணி உள்பட வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.
