ஆதார் அப்டேட் செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?
ஆதார் கார்டில் கைரேகை அப்டேட் செய்யவில்லை என்றால் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க முடியாது என்பது முற்றிலும் பொய்யான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் கார்டில் கைரேகை அப்டேட் செய்யவில்லை என்றால் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க முடியாது என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது பொய்யான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள்' வலைதளங்களில் பரப்பப்படுகிறது
இது முற்றிலும் பொய்யான தகவல். 'ரேஷன் கடைகளில் கைவிரல்ரேகை/கண்கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் (Authentication failure) குடும்ப அட்டைதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையொப்பம் பெற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன, கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை.
ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை இந்த முறையில் செலுத்தினால் ரூ.20 லட்சம் சேமிக்க முடியும்!!
ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண்கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எவ்வித தொடர்புமில்லை' என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கமளித்துள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்!
இவ்வாறு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இலவச ஆதார் அப்டேட்:
இந்தியக் குடிமக்களுக்கான அடையாள ஆவணங்களில் முக்கியமானது ஆதார் கார்டு. அரசுத் திட்டங்களில் பயன் பெறுவதற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இதனால், ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் எப்போதும் சரியாக இருப்பதை உறுதிசெய்வது அவசியம்.
ஆதார் கார்டில் உள்ள பிழைகளைத் திருத்துதல், முகவரி, மொபைல் எண் போன்ற ஆதார் விவரங்களை மாற்றுதல் ஆகியவற்றை செப்டம்பர் 14ஆம் தேதி வரை இலவசமாகச் செய்யலாம். இந்தக் காலக்கெடு முடிந்த பிறகு ஆதார் கார்டில் உள்ள தகவல்களை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆதார் விதிமுறைகளின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் உள்ள அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA) ஆகியவற்றுக்கான ஆவணங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு கிடைக்கும். ப்ளூ ஆதார் என்ற பெயரில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 5 முதல் 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் புளூ ஆதார் அட்டை விவரங்களையும் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்க வேண்டும்.
இன்னும் 10 நாட்கள்:
ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து இலவசமாக புதுப்பித்துக்கொள்ளுமாறு ஆதார் ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆதார் ஆணையம் இலவச அப்டேட்டுக்கான அவகாசத்தை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. முதலில் இந்தக் காலக்கெடு மார்ச் 14ஆம் தேதி முடிய இருந்தது. அது ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின், செப்டம்பர் 14-ஆம் தேதி வரை இலவசமாக ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த அவகசாம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன.
வெறும் 55 ரூபாய் போதும்! சிறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டம்!