idols stolen from Tamil Nadu found at Gujarat

தஞ்சாவூரில் இருக்கும் பிரஹதீஸ்வரர் ஆலயம், சோழ மன்னனான ராஜராஜ சோழனால், கிபி 11-ஆம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டது. உலகிலுள்ள அனைத்து கட்டிடக் கலைஞரும் அதிசயிக்கும் படி, பல நுட்பமான தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த கோவில்.

தஞ்சாவூர் பெரிய கோவில் எனவும் அழைக்கப்படும் இந்த ஆலயம், உலக பாரம்பரியச்சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் பல அரிய சிற்பங்கள் இருக்கின்றன. கற்சிலைகள் மட்டுமல்லாமல், உலோகங்களாலும் ஐம்பொன்னாலும் ஆன சிலைகளும் இங்கு இருக்கின்றன. பல நூற்றாண்டுகள் பழமையுள்ள இந்த சிலைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலில் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி ஆகியோரின் உலோக சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து திருடு போய்விட்டது. இந்த சிலைகளின் மதிப்பு சுமார் 150 கோடி பெறும்.

இவ்விரு சிலைகளும் காணாமல் போனதை தொடர்ந்து, போலீசார் இன்று வரை தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அந்த தேடுதலின் போது குஜராத்தில் வைத்து இவ்விரு சிலைகளையும் மீட்டெடுத்திருக்கின்றனர் போலீசார். நாளை வியாழன் அன்று ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது.