திருச்சி,
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஊடகங்கள் தான் உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மரணம் அடைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திருச்சிக்கு வந்து தனியார் ஓட்டலில் தங்கினார்.
பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சாப்பிடுகிறார், எழுந்து உட்கார்ந்தார், நடைபயிற்சி செய்தார் என்றெல்லாம் யார், யார் பெயரிலோ தினமும் அறிக்கை வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் திடீர் மரணம் அடைந்துள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவரை 23 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு இதுவரை தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், சமீபத்தில் துறையூர் அருகே ஒரு வெடி மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண உதவி முதலமைச்சர் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்காதது ஏன்?
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஊடகங்கள் தான் உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்ட திருச்சி தொழில் அதிபர் வீகேயென் கண்ணப்பனை அவரது வீட்டுக்கு சென்று ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
