Hydrocarbon struggle will continue until the program - Action protestors decided
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று இரவுக்குள் போராட்டம் தொடருமா, இல்லை கைவிடப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்ட குழுவினர் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து நெடுவாசல் மக்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.
கடந்த 15 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
மேலும் இத்திட்டத்திற்கு குறைந்த அளவு நிலப்பரப்பே தேவைப்படும் எனவும், இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் தெளிவு படுத்தியிருந்தது.
மத்திய அரசு அளித்த இத்தகைய விளக்கத்தை மக்கள் புறக்கணித்தனர். தங்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவை இல்லை என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போராட்ட குழுவினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசு அனுமதி தராமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து இன்று போராட்ட குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், போராட்டம் தொடருமா இல்லை கைவிடப்படுமா என்பது குறித்து இன்று இரவுக்குள் அறிவிப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர்.
தற்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
