கடலூர்

கடலூரில், சாராயம் குடிக்க பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(45). தொழிலாளியான இவர், ஏற்கனவே திருமணமானவர். 

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த செல்வி (40) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

குடி போதைக்கு ஆளான மணிகண்டன், தினமும் சாராயம் குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்துவந்தார். கடந்த 11-ஆம் தேதி இரவு சாராயம் குடிக்க செல்வியிடம் பணம் கேட்டுள்ளார் மணிகண்டன். அதற்கு செல்வி, தன்னிடம் பணம் இல்லை என்றார். 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்தார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்படவே செல்வி மீது, மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் மணிகண்டன். 

இதில் பலத்த காயமடைந்த செல்வியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனிடையில் இந்த சம்பவம் குறித்து செல்வி, மருத்துவமனையில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பண்ருட்டி காவலாளர்கள் மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவலாளர்கள் கைது செய்து, பண்ருட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து மணிகண்டன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்ததை கொலை வழக்காக மாற்றி உள்ளனர் காவலாளர்கள்.

சாராயம் குடிக்க பணம் தராத மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவனே கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.