hunger strike against GST on October 2 in Tamilnadu
திருவள்ளூர்
ஜி.எஸ்.டி. வரியால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதால் அதனைக் கண்டித்து வருகிற அக்டோபர் 2–ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் 43–வது பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு திருவள்ளூர் நகர அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் திருவடி தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் ராசகுமார், துணைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் பழனிசாமி, செயற்குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர், “ஆன்லைன் வணிகத்தின் மூலம் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைன் வணிகத்தைத் தடுக்க வணிகர்கள் அனைவரும் ஒன்றுத் திரள வேண்டும். நாம் போராடினால் மட்டுமே அதனை வெற்றிப் பெற முடியும்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனைக் கண்டித்து வருகிற அக்டோபர் மாதம் 2–ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைத்து வணிகர்களும் கலந்து கொண்டு ஜி.எஸ்.டிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
