தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிரமங்கலத்தில் கடந்த 30ம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது.

இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகியோர் மீது கொலைமுயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.

இதனை கண்டித்தும், ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரா மங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண் சோறு சாப்பிடுவது, ஒப்பாரி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஓஎன்ஜிசி  நிறுவனம், கதிரா மங்கலம் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 5 பேர் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதனால், அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதேவேளையில், நேற்று கும்பகோணம் கோர்ட்டில் இருந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களை ஆகஸ்ட் 11ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.