கன்னியாகுமரி

இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதை கண்டிப்பதாக கூறியும், ஐயாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சீமான், என்.ஆர்.தனபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஐயா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. கடந்த 4–ஆம் தேதி இங்கு ஐயா வைகுண்டர் அவதார தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில், "இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதை கண்டிப்பதாக கூறியும், ஐயாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும்" நேற்று காலையில் சாமிதோப்பு தலைமை பதி முன்பு உள்ள கலையரங்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். சாமிதோப்பு பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் ஆனந்த், ஐயா வைகுண்டர் அறநிலைய பரிபாலன அறக்கட்டளை நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் என்.ஆர்.தனபாலன், "ஐயாவழியில் மட்டுமே முழுக்க முழுக்க தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. ஐயாவழி கோவில்களில் கருவறை வரை பெண்கள் செல்ல அனுமதி உண்டு. இதுதான் ஐயாவழியின் சிறப்பு.

அறநிலையத்துறை அதிகாரிகள் சாமிதோப்பு தலைமை பதியை கையகப்படுத்த நினைத்தால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சல்லிக்கட்டு போராட்டத்தைபோல் பெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"என்றுஅவர் பேசினார்.

இதில், பாலபிரஜாபதி அடிகளார், “எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஐயாவழி மக்களை திரட்டி போராட்டம் வாரந்தோறும் நடத்த உள்ளோம். 

வருகிற ஞாயிற்றுக்கிழமை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஐயாவழி மக்களை திரட்டி சேலத்தில் போராட்டம் நடத்தப்படும். இதேபோல் இனி வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் போராட்டம் வெவ்வேறு இடங்களில் நடைபெறும்“ என்று தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், “ஐயாவழி என்பது தனி வழிபாட்டு முறையை கொண்டது. மக்களை தலை நிமிர்ந்து நடக்க வைப்பதற்காக ஐயா கொண்டு வந்த அன்புவழி இது. எனவே, ஐயா வழியை தனி மதமாக அறிவிக்க வேண்டும்“ என்று கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் வந்த ஐயாவழி பக்தர்கள், நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கேரளாவில் உள்ள நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.