மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம்? தமிழக அரசு கொடுக்கும் ஐடியா!
மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம் என்பது தொடர்பான கையேடு ஒன்றை தமிழக அரசு வழங்கியுள்ளது
குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதுமே இந்த திட்டம் அமலுக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து இந்த திட்டம் தாமதமானது. இருப்பினும், மகளிருக்கான உரிமை தொகை கட்டாயம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் உறுதியளித்து வந்தார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி (இன்று) மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும். இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனவும் பெயர் சூட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது, திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு, இந்த நிதி ஆண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நிதி ஆண்டில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குக்கு சென்றது. மேலும், மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000த்தை எப்படி சேமிக்கலாம் என்பது தொடர்பான கையேடு ஒன்றையும் தமிழக அரசு வழங்கியுள்ளது.
அதில், தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வைப்பு திட்டம், பொன்மகன், செல்வ மகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்களில் இந்த தொகையை பெண்கள் சேமித்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிதி விஷயங்களில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனை ஆண்டுகள் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டும் ஸ்டாலின் ஆள்கிறான்- முதலமைச்சர்
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை சேமிப்புத் தொகையை செலுத்தினால் போதும். டெபாசிட் தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். அந்த சமயத்தில் நீங்கள் செலுத்திய தொகையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொகை உங்களுக்கும் அதிகமாக கிடைக்கும்.
அதேபோல், தொடர் வைப்புத்தொகைக்கு 7.50 சதவீதம் வரை வங்கிகள் வட்டி வழங்குகின்றன. மற்றத் திட்டங்களிலும் நல்ல வட்டி கிடைக்கும். எனவே, உரிமைத் தொகையான ரூ.1000த்தை பெண்கள் சிறந்த முறையில் சேமித்தோ அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கோ பயன்படுத்தி பலன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.