எத்தனை ஆண்டுகள் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டும் ஸ்டாலின் ஆள்கிறான்- முதலமைச்சர்
சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர்க்கு ஏராள திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முத்தாய்ப்மாக இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளதாக குறிப்பிட்டார்.
இது உதவி திட்டம் அல்ல. இது உங்கள் உரிமைத் திட்டம் என குறிப்பிட்டார். சுருக்கு பையில் பணம் இருந்துச்சினா, நான் நிமிர்ந்து நடப்பேன்' என்று ஒரு பெண்மணி கூறினார், இந்த வார்த்தையை நினைத்து காலத்திற்கும் நான் பெருமைப்படுவேன். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறான் என்றார் பேரறிஞர் அண்ணா,
அதேபோல் இன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள். சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமே சாட்சி எனவும் குறிப்பிட்டார்.