How to work in the southwest monsoon when the flooding occurs - collector explains

தூத்துக்குடியில், தென்மேற்கு பருவமழையால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் எந்தெந்த துறைகள் எப்படி செயல்படனும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஆட்சியர் வெங்கடேஷ் விளக்கி உத்தரவிட்டார்.

தென்மேற்கு பருவமழையின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளதடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியது:

“மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வருவாய்துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தடையின்றி கிடைத்திட, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளில் தேவையான அளவு இருப்பு இருப்பதை நுகர்பொருள் வழங்கு துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

சுகாதாரத்துறை அலுவலர்கள் தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் ஆகியவற்றில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மாநகராட்சி, நகரசபை மற்றும் நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பாதுகாத்திட, படகு உள்ளிட்டப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கால்நடைத் துறையினர் கால்நடைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையினர் மருத்துவ மீட்புக்குழுக்களை அமைத்து அவை அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி ஆட்சியர் தீபக் ஜேக்கப், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தவமணி, உதவி ஆட்சியர்கள் கணேஷ்குமார், அனிதா மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.