மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்: 2019 தேர்தலை விட குறைவான வாக்குகள் பெற்ற திமுக!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளை திமுக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திமுக தான் போட்டியிட்ட 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் என அனைத்து கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
சரிந்தது சாம்ராஜ்யம்: கோட்டையை தகர்த்த பாஜக - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா!
இருப்பினும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளை திமுக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முழுவதுமாக எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக மட்டும் தனித்து தான் போட்டியிட்ட 22 தொகுதிகளில் 11,754,710 வாக்குகளை பெற்றுள்ளது. 1.82 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.
இதுவே கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்ற திமுக 14,363,332 வாக்குகளை பெற்றது. 2019 தேர்தலில் 2.34 சதவீத வாக்குகளை திமுக பெற்றது. அதனை ஒப்பிடும் போது, திமுக குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், 2019 தேர்தலை விட 2024 தேர்தலில் குறைவான தொகுதிகளிலேயே திமுக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.