Asianet News TamilAsianet News Tamil

பாஜக உறவை முடித்துக் கொண்ட அதிமுக: தமிழ்நாட்டில் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும்?

பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளதால் அக்கட்சியுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.

How likely alliance to be happen in tamilnadu for upcoming loksabha election smp
Author
First Published Sep 28, 2023, 1:54 PM IST

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. நன்றி இனி வராதீர்கள் என அதிமுக தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடை கிட்டத்தட்ட முடித்து விட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அதிமுக அதிலிருந்து வெளியே வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அதிமுகவுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளதால், திமுகவுக்கு சற்று பதற்றம் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த பதற்றம் தேர்தல் வெற்றியை நோக்கி அல்ல; கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதில் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஏனெனில், மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தற்போது அதிமுக எனும் மற்றொரு வாசல் கிடைத்துள்ளது. எனவே, திமுக கூட்டணி கட்சிகள் கூடுதலாக இடங்களை கேட்க வாய்ப்புள்ளது. இதனை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது அக்கட்சிக்கு முன்னிருக்கும் சவால்.

எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மூன்று அணிகள் இருக்க வாய்ப்புள்ளது. ஒன்று திமுக தலைமையிலான அணி, மற்றொன்று அதிமுக தலைமையிலான அணி, அடுத்தது பாஜக தலைமையில் அமையப்போகும் அணி. கூட்டணி முறிவுக்கு பிறகு, புரட்சி பாரதம் மட்டுமே அதிமுகவுடனான கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. இதர சிறிய கட்சிகள் இன்னும் உறுதிபடுத்தவில்லை. பாமகவை பொறுத்தவரை திமுக அல்லது அதிமுக அணியில் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தலின்போது, பாஜக தலைமையிலான அணியில் அக்கட்சி இருக்க வாய்ப்பில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் வேறு மாதிரியான நிலைப்பாட்டை அக்கட்சி எடுக்க வாய்ப்புள்ளது. 

அதேபோல், ஓபிஎஸ், டிடிவியை சேர்த்துக் கொண்டு தனியாக ஒரு அணியை பாஜக அமைக்க வாய்ப்புள்ளது. இந்த அணியில் தேமுதிகவும் சேர வாய்ப்புள்ளது. ஓபிஎஸ்சை பொறுத்தவரை பாஜக சொல்வதை  கேட்கும் இடத்தில் இருக்கிறார். எனவே, அக்கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதனை அவர் ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் தனக்கு இரண்டு வாய்ப்பு உள்ளது என டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், திமுக எதிர்ப்பில் அவர் உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் உடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. எனவே, பாஜகவுடன் டிடிவி தினகரன் செல்ல வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை எப்போதும் போல அக்கட்சி தனித்தே நிற்கும்.

இதனிடையே, திருமாவளவன் உடல்நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி விசாரித்தது பேசுபொருளாகி உள்ளது. கூட்டணி முறிந்த நேரத்தில் இந்த அனுசரணையான விசாரணை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது அரசியல் நாகரீகம் கருதிய விசாரணையே தவிர, தற்போதைய நிலவரப்படி வேறுமாதிரி பார்க்க தேவையில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.! அதிமுக கூட்டணியில் விசிக இணைகிறதா? கே.பி முனுசாமி அதிரடி பதில்

அதேசமயம், திருமாவுக்கான வாய்ப்பு அதிமுக பக்கம் திறந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கலாம்; பாமகவை கூட்டணிக்குள் திமுக கொண்டுவந்தால் அதிமுக கூட்டணிக்கு திருமா செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை என்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னால் பல்வேறு அரசியல் இருப்பதையும் திருமா நன்கு அறிந்தேயிருப்பார் என்பதால் அவர் திமுக கூட்டணியிலேயே தொடர வாய்ப்புள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கும் தற்போது வாசலை திறந்து விட்டுள்ளது அதிமுக. ஏற்கனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் லேசாக உரசல் இருக்கும் நிலையில், காங்கிரஸை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர பலரும் முயற்சித்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், காங்கிரஸ் மேலிடத்துடன் திமுக நல்ல உறவில் இருப்பதால், அதற்கும் வாய்ப்பு குறைவே என்றாலும் அரசியலில் எந்தநேரமும் எதுவும் நடக்கலாம்; எதுவும் சாத்தியம் என்பதால் வரவிருக்கும் நாட்கள் தமிழக அரசியல் களம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios