தேவகோட்டை

தேவகோட்டையில், “வீட்டிற்கு ஒரு கழிப்பறை பயன்படுத்துவதன் மூலம் தொற்று நோய் பரவாமல் தவிர்க்கப்படும்” என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட புளியால் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினர். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், புதிய குடும்ப அட்டை பெறுதல், வேளாண்மைத் துறையின் சார்பில் உளுந்து, தென்னை மரக்கன்றுகள், நெல் நுண்ணோட்டம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் கத்தரி, தக்காளி நாற்று, வேளாண் எந்திர வாடகை மையம் அமைத்தல் என மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறியதாவது, “இந்த மக்கள் தொடர்பு முகாம் தொடங்குவதின் நோக்கம் காலவிரயமும், பொருளாதார விரயமும் இல்லாமல், நேரடியாக கிராமங்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுவது. இதன்மூலம் அரசு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறது, அதன் பயன்கள் மற்றும் தகுதிகள் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

மேலும் அரசு மக்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் உதவுகிறது. மக்கள் பாலீதின் பைளை பயன்படுத்துகின்றனர். பின்னர் பயன்படுத்திய அதனை கீழே போடும்போது, அதில் மழைநீர் தேங்கி அதிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவுகிறது. பாலிதீன் பைகள் மக்காமல் இருப்பதால் மண்ணின் தரத்தையும், நீர் ஆதாரத்தையும் பாதிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரம் கெட்டு எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒரு கழிப்பறை பயன்படுத்துவதன் மூலம் தொற்று நோய் பரவாமல் தவிர்க்கப்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் கழிப்பறைகள் கட்ட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் நமது சுற்றுப்புறங்களை எப்போது தூய்மையாக வைத்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த முகாமில் தேவகோட்டை சப்–கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ், காரைக்குடி எம்.எல்.ஏ. இராமசாமி, தேவகோட்டை வட்டாட்சியர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.