மறைமுகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தென்மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாநகர தலைவி ரோஜாபேகம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரேவதி ‌ஷகிலா, மாநில சிறுபான்மை பிரிவு முன்னாள் தலைவர் முகமதி சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜான்சிராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.

மாநில தலைவர் ஜான்சிராணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனைத் தடுக்க பெண்கள் பாதுகாப்பு அவசர சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்.

ரேசன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரே‌சன் பொருட்களை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறைமுக பேருந்து கட்டண உயர்வை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஏரி, குளங்களை தூர்வார அரசு முன்வர வேண்டும்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுடெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எப்போது என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.