சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக பகீர் புகார் கிளம்பியுள்ளது.   

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு அரசு மருத்துவமனையில்  ஹெச்.ஐ.வி செலுத்தப்பட்டது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கர்ப்பிணி பெண்ணையும், கருவில் இருக்கும் குழந்தையை மீட்க உயர் ரக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தமிழக சுகாதாரத்துறையின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடைபெறாது என சுகாதரத் துறை உறுதியளித்து வந்த நிலையில் இதே போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாதிக்கப்பட்ட சென்னை, மாங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண் கூறிய புகாரில், ``குழந்தை பெறுவதற்காக சென்னை மாங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது எனக்கு `ரத்த சோகை' ஏற்பட்டதாகவும், இதனால் எனக்கு ரத்தம் செலுத்த வேண்டும் எனக் கூறி மாங்காடு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவமனை நிர்வாகமே, 108 ஆம்புலன்ஸ் மூலம் என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். அதற்கு முன்னதாக எடுத்த பரிசோதனைகளில் எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. ஏப்ரல் 5-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனக்கு 2 யூனிட் ரத்தம் செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 18-ம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பரிசோதனை செய்தனர். அதில் எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்ததாக தெரிய வந்தது. மாங்காடு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் நான் சிகிச்சை எடுக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. தனக்கு நேரந்த அநீதி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரிடம் புகாரளித்தும் இதுவரை பயனில்லை’’ என கன்னீர் மல்க கூறினார்.

 

அடுத்தடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு நடந்துள்ள இந்த அநீதி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது.