திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மணல் திருட்டை தடுக்கக் கோரியும், தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் உடலில் மணலை பூசிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் ஏராளமான மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அதில், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க மாநிலக் கொள்கை பரப்புச் செயலர் கே.ராஜகோபால் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் வழியாகப் பாயும் செய்யாற்றில் இருந்து பகலில் மணலை சேகரித்து குவித்து வைக்கின்றனர். இவற்றை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக லாரிகள், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் மணல் கொள்ளையர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, மணலைத் திருடுவேர் மீது மாவட்ட  நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அளிக்க வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலர் எஸ்.விஜய் தலைமையிலான நிர்வாகிகள் தங்களது உடலில் மணலை பூசிக் கொண்டு வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.