Asianet News TamilAsianet News Tamil

கிளப்களில் இனி சிசிடிவி கேமிரா பொருத்தப்படுமா..? - தமிழக டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவு

பொழுதுபோக்கு கிளப்களில் தடைசெய்யப்பட்ட ரம்மி உள்ளிட்ட தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் சிசிடிவிக்கள் பொருத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்தான சாதக பாதகங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
 

High Court Order
Author
Chennai, First Published Dec 1, 2021, 2:47 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம்.நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப், சென்னை வடபழனி பைவ் ஸ்டார் கிளப் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.அதில், தங்களது பொழுதுபோக்கு கிளப்களில் சோதனை என்ற பெயரில் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். 

High Court Order

இந்த வழக்குகள் இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. கிளப்களுக்கு வரும் உறுப்பினர்களில் சிலர் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாகவும், அவர்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறி, பெரும்பாலான மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞரால் வாதிடப்பட்டது. மேலும் காவல்துறை தரப்பில் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக புகார்கள் வரும் நபர்கள் பொழுதுபோக்கு கிளப்களுக்கு வந்தால், அவர்களை கண்காணிக்க மட்டுமே உள்ளே செல்வதாகவும், அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் நோக்கம் ஏதும் எங்களுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கிளப்களுக்கு வரும் உறுப்பினர்களுக்கு எதிராக புகார்கள் ஏதும் வராத நிலையில், சம்பந்தப்பட்ட கிளப்களுக்குள் சென்று விசாரணை நடத்துவதில்லை என்றும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. 

High Court Order

இதுக்குறித்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கிளப் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மேலும் இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும், பொழுதுபோக்கு கிளப்களில் தவறான நடவடிக்கைகள் நடைபெறாமல் கண்காணிக்கும் வகையிலும் கிளப்களில் ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தலாம் என பரிந்துரை செய்தார். அவ்வாறு கிளப்களில் பொருத்தப்படும் சிசிடிவி கேமிராக்கள் உறுப்பினர்களின் தனியுரிமையையும், காவல்துறை விசாரணையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டுமெனவும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தகுந்த நபராக தமிழக டிஜிபி இருப்பதால், அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த முடியுமா, அதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விரிவான ஆய்வுசெய்து உறுதியான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios