நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு தரும் வாடகை மையம் 15 வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கப்படும் எனச் சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டது.
இதில், முதல்கட்டமாக 2015-16ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் 9 வட்டாரங்களில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் புதிய விவசாய குழுக்கள் அமைத்தோ அல்லது ஏற்கெனவே செயல்பட்டு வரும் விவசாய குழுக்களுக்கோ அல்லது வட்டார விவசாயிகள் சங்கம், நீர் பயன்படுத்துவோர் சங்கம், சுய உதவிக்குழு, கிராமப்புற வேலைவாய்ப்பற்றோர் இளைஞர்கள் குழு, நபார்டு குழு, பண்ணை மகளிர் முன்னேற்ற குழு போன்ற குழுக்களுக்கோ அல்லது தொழில் முனைவோருக்கோ இந்த வாடகை மையம் அமைப்பதற்காக ரூ.25 இட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் வாங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் ரூ.10 இலட்சம் அரசு மானியமாகவும், ரூ.15 இலட்சம் இக்குழுக்களின் பங்கீட்டுத் தொகையாகவும் செலுத்தி இத்திட்டத்தை அவர்கள் செயல்படுத்திட வழிவகை செய்யப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் (2016-17) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நாமக்கல், கொல்லிமலை, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பள்ளிபாளையம், பரமத்தி ஆகிய 6 வட்டாரங்களிலும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டங்களில் மோகனூர், எலச்சிபாளையம் வட்டாரங்களில் தலா ஒரு வாடகை மையம் அமைக்க மொத்தம் ரூ.50 இலட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள், கருவிகளை ரூ.20 இலட்சம் மானியத்தில் விவசாய தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை வழங்கினார்.
இதுதவிர, வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் 4 வட்டாரங்களிலும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்கவும் ஆணை பெறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பிரேம்குமார், உதவிச் செயற்பொறியாளர்கள் எஸ்.ஜெகதீசன், கை.குப்புசாமி, உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உடனிருந்தனர்.
