நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Nepal crisis Tamil Nadu rescue : நேபாளம் தற்போது கடுமையான அரசியல் மற்றும் சமூக நெருக்கடியில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 8 அன்று தொடங்கிய இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள், சமூக ஊடகத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, ஊழல், பாரம்பரியம் ஆகியவற்றுக்கு எதிராக வெடித்தன. இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறி, பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா செய்ய காரணமாக அமைந்தது. பல்வேறு இடங்களில் தீவைக்கப்பட்டது. இதுவரை இறப்பு எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது, நாடு முழுவதும் கட்டுப்பாட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் இடைக்கால அரசு அமைப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. இதன் காரணமாக நேபாளத்தில் தமிழர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
நேபாளத்தில் வன்முறை- சிக்கிய தமிழர்கள்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுதில்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மீட்பு பணியில் தமிழக அரசு
இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர புதுதில்லி, தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செய்த தமிழ்நாட்டைச் சார்ந்த 116 நபர்கள் பத்திரமாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர். மேலும், நேபாளத்தில் சிக்கித்தவித்து வரும் தமிழர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கும் புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 24x7 கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்: 011-24193300
கைபேசி எண் : 9289516712 (whatsApp)
மின் அஞ்சல் : tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com
