நேபாள வன்முறை குறித்து கவலை கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், நமது நாட்டின் அரசியலமைப்பால் பெருமிதம் கொள்வதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.
நமது அண்டை நாடான நேபாளம் வன்முறை காரணமாக பற்றி எரிகிறது. பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூகவலைத்தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் பொங்கியெழுந்தனர். சமூக ஊடகங்கள் மற்றும் ஊழலுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டு மற்றும் பிற நேபாள நகரங்களில் பெரும் போராட்டம் நடத்தினார்கள்.
நேபாளத்தில் வன்முறை
ஒரு கட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் அமைச்சர்களின் வீடுகளையும் அரசு கட்டிடங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதிபர் மாளிகையையும், நாடாளுமன்றத்துக்கும் தீ வைத்தனர். போராட்டம் வலுத்த நிலையில், நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்த நிலையில் அந்த நாட்டு அமைச்சரையே போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். ராணுவம் களமிறங்கிய பிறகு போராட்டம் ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனால் இந்த வன்முறையில் 30 பலியானதும், 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
நமது அரசியலமைப்பால் பெருமிதம்
இந்நிலையில், நேபாளத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், புதன்கிழமை இந்திய அரசியலமைப்பைப் பற்றி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தது. "நமது அரசியலமைப்பைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நமது அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். நேற்று நேபாளத்தில் என்ன நடந்தது" என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் பெருமையுடன் குறிப்பிட்டார்.
நமது அரசியலமைப்பு மிகவும் வலிமையானது
நமது அரசியலமைப்பு மிகவும் வலிமையானது, அது ஜனநாயகத்தை அப்படியே வைத்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியரசுத் தலைவர் பரிந்துரை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்து உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்தது.
