வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு அல்லது மேற்கு பகுதியை நோக்கி நகர கூடும்.  இதனை தொடர்ந்து தென்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மித அளவிலான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

அதனுடன், காஞ்சீபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும்.  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  இதனால் கடல் சீற்றமுடன் காணப்படும்.  இதனையொட்டி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதனிடையே, அரபி கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் இன்று மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த புயலின் மையப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆக இருந்தது.  இன்று காலை இதன் வேகம் மணிக்கு 200 கி.மீ. ஆக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலால் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.