இன்று எங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று முதல் 26ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி. ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவ, மாணவியருக்கு முக்கிய செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22 முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை வட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று முதல் 24ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகல் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
21 மற்றும் 22ம் தேதி தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23ம் தேதி தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை! தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை!
அரபிக்கடல் பகுதிகள்
இன்று முதல் 23ம் தேதி வரை மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.