ஓயாத கனமழை; டிசம்பர் 2 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில் தெரியமா?
Schools and Colleges Leave : நாளையும் கனமழை தொடரவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பரவலாக பெய்து வருகிறது. சென்னையின் அனேக இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றே கூறலாம். சென்னைக்கு அதிக கனத்த மழை எச்சரிக்கை இல்லை என்றாலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இன்று காலை வரை திருவண்ணாமலை பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்பொழுது கொஞ்சம் குறைய தொடங்கியுள்ள நிலையில், இந்த ஃபெஞ்சல் புயலானது தர்மபுரி நோக்கி நகர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா பகுதிக்கு செல்ல உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இருப்பினும் நாளையும் தொடர்ச்சியாக அநேக இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய அதிக கனத்த மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கோவைக்கும் எதிர்வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தாலும் அதனுடைய விளைவாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை டிசம்பர் 2ம் தேதியும் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை தொடரும் காரணமாக கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் அங்குள்ள கல்லூரிகளில் வழக்கம் போல நாளை திங்கட்கிழமை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தர்மபுரி நோக்கி நகரும் ஃபெஞ்சல்; கோவையிலும் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்!