தர்மபுரி நோக்கி நகரும் ஃபெஞ்சல்; கோவையிலும் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்!
Heavy Rain : ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலையில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் இப்போது தர்மபுரி நோக்கி நகர்ந்து வருகின்றது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை பெரிய அளவில் புரட்டி போட்டு இருக்கிறது என்றே கூறலாம். சென்னையில் பல இடங்கள் கடந்த சில நாட்களாகவே வெள்ளத்தில் மூழ்கி இருந்த நிலையில், தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேற்று சென்னையிலிருந்து நகரத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல், இன்று மாலை வரை திருவண்ணாமலை முழுவதும் கனத்த மழையை பெய்து வந்தது.
ஏற்கனவே அங்கு சுமார் 150 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில், இன்று காலை 8:30 மணி நிலவரப்படி சுமார் 222 மில்லி மீட்டர் மழை அங்கு பெய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்றைய தினத்தையும் ஒப்பிடும் பொழுது திருவண்ணாமலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 370 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் இப்பொது தொடர்ச்சியாக தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களுக்கும் நகர தொடங்கும் என்று தமிழக வெதர்மேன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை ஃபெஞ்சல் புயலால் பெய்து வந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இறுதியாக தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்திலும் இதனால் அதிக மழை இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி எதிர்வரும் ஏழு நாட்களுக்கு கோவையிலும் பரவலாக நல்ல மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது. சராசரியான வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸில் இருந்து, 23 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கும் என்றும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸில் இருந்து, 31 டிகிரி செல்சியஸ் வர இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று கோவையின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்த நிலையில், டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கோவையின் அனேக இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய அதிக கனத்த மழை வர பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டிசம்பர் 7ஆம் தேதி இந்த மழை குறைய ஆரம்பித்து, டிசம்பர் 8ம் தேதி முதல் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு மரண பயத்தை காட்டும் பேய் மழை! விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய நிலையை பாருங்க!