வங்கக்கடலில் 48 மணிநேரத்தில் மீண்டும் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்:- நாளை முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு புயலாகவும் மாறி தமிழகம், ஆந்திர கடற்கரையோரத்தை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் எனவும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள நிலவரப்படி அடுத்த மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

12-ம் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகர தொடங்கும். இதன்காரணமாக வரும் 13-ம் தேதி முதல் தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து 'பேய்ட்டி' என பெயர் சூட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 3 செ.மீ, ஆரணி, ஆய்க்குடியில் தலா ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.