தென்மேற்கு பருவக் காற்று வலுவடைந்துள்ளதால் நாடு முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு  தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட சற்று முன்பே தொடங்கிவிட்டது. ஜுன் முதல் வாரத்துக்குப் பதிலாக மே மாதம் இறுதியிலேயே பருவ மழை தொடங்கிவிட்டதால் பல்வேறு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.

தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கேரளத்தைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் , கபினி அணையில் இருந்து சனிக்கிழமை மாலை விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையின்நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட் டங்களில் கனமழையும், உள்மாவட்டங்களில் மிதமான மழையும்  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருவதால் வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்க இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா போன்ற பகுதிகளில் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் தெலுங்கானா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் எனவும், குறிப்பாக வடக்குப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.