வேலூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆந்திர மாநில வனப்பகுதியிலும் நேற்று பெய்த பலத்த மழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. அந்த நீர் அம்பலுரை நோக்கி பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து வருகிறது. 
ஆந்திர மாநில எல்லையான, வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 15 அடி அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகளை ஆந்திர அரசு முடித்தது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து வரும் நிலை இல்லாமல் போனது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் அடாவடித்தனத்தால் பாலாறு பாழாகும் நிலை ஆகிவிட்டதே என்ற வேதனையில், வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனு புல்லூர் தடுப்பு அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று மாலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆந்திரா மாநில வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் அணைத்தும் புல்லூர் தடுப்பணைக்கு வந்ததால் அணை நிரம்பி தமிழக பகுதிகளுக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது. 

இந்த நீர் அம்பலுரை நோக்கி பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.