வங்கக் கடலில் காற்றுஅழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், சென்னை உட்பட, வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, சில நாட்களாக, வலு குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம்  மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இந்த முறை, கிழக்கு திசையை நோக்கி காற்று வீசுவதால், வங்க கடலில் இயல்பு நிலை மாறியுள்ளது.

அந்தமான் தீவுகள் முதல், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்கள், ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய பகுதிகள் வரை, நேற்று முன்தினம், காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை, நேற்றிரவு, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் சேர்ந்து, கடலோர பகுதிகளில், மேல் அடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மற்றும் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 'இயல்பை விட அதிக வேகத்தில் காற்று வீசும்; கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் அருகே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என, இந்திய கடலியல் தகவல் அமைப்பு எச்சரித்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு முழுவதும் பல இங்களில் மழை வெளுத்து வாங்கியது. தஞ்சாவூர், நாகை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.