மழை மேகங்கள்! இந்த பகுதிகளில் அடிச்சு ஊத்தப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் பகீர்!
வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வரும் நாட்களில் மழை இருக்கா? இல்லையா? என வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் ஜனவரி 1ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 2ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: மதுரை மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேகங்கள் அடுத்த 1 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மற்றும் கொடைக்கானலில் நகரும். இன்று இரவு முதல் நாளை காலை வரை தென் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.