காற்றின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பகுதியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடியை மழையோ பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுபேசிய அவர், தென்மேற்கு பருவமழை வருகிற 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும். 

வளிமண்டலத்தில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் அடுத்து 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையம், வேலூர் - விரிஞ்சிபுரத்தில் 7 செ.மீ., உளுந்தூர்பேட்டை 6 செ.மீ., கடலாடி 5 செ.மீ., ஆம்பூர், வேலூர், பெரியகுளம் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.