தமிழகத்தில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல்  29ம் தேதி வரை கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நிலவியது. அதற்கு பிறகு வெயிலின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் அதே நிலையில் இருந்து வருகிறது. 

கோடை முடிந்தும் வெயில்  குறையவில்லை என்று மக்கள் புலம்பும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே,கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்ய தொடங்கி உள்ளது. 

ஆனால் சமீபத்தில் உருவான வாயு புயல் குஜராத் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றின் போக்கு காரணமாக,  அந்த புயல் திசை மாறி மேற்கு நோக்கி நகர்ந்தது. 

தற்போது வாயு புயல் அரபிக் கடலில் நிலை கொண்டு அங்கும் இங்கும் என்று போக்கு காட்டி வருவதால் கேரளாவில் பெய்ய வேண்டிய மழை குறைந்து விட்டது. வாயு புயல் கரையைக் கடந்தால்தான் கேரளாவிலும் மழை பெய்யும் என்ற நிலை  ஏற்பட்டுள்ளது.


 
அங்கு மழை பெய்தால் தான் தமிழகத்திலும் மழை பெய்யும். இந்நிலையில், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான இடங்களில் உருவாகியுள்ள  வறண்ட வானிலை காரணமாக வெயில் கொளுத்தி வருகிறது. அதிபட்சமாக சென்னை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. 

திருச்சி, கடலூர், வேலூர் 104 டிகிரி, திருத்தணி, காரைக்கால்,  நாகப்பட்டினம், தூத்துக்குடி 102 டிகிரி வெயில் நீடித்தது. 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை,சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், கரூர்,  திருச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை வரை அதி தீவிர வெப்ப காற்று வீசும் என்றும் பொது மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 வரை முடிந்த அளவு வெளியில் வராமல் இருக்க வேண்டும் என்றும் வாளிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..