மருத்துவ படிப்பில் சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தமிழக அரசு அவசர சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது செல்லாது. இதை செயல்படுத்தினால், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசின் சட்ட வரைவு தொடர்பாக தலைமை வழக்கறிஞர், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக அரியலூரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா வாதிட, அண்மையில் அவர் டெல்லி சென்றார்.

இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து மருத்துவ கவுன்சிலிங் நீட் தேர்வு அடிப்படையிலேயே நடத்தப்பட்டது. ஆனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா, மருத்துவ படிப்பில் சேர இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவுக்கு செல்லக்கூடாது எனவும், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.