அரூர் அருகே பள்ளி சிறுவர்களை கை கால்களை அமுக்கி விட சொல்லும் தலைமை ஆசிரியை; வீடியோ வைரலான நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொடக்கப் பள்ளியில் மாவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளை கை கால்களை அமுக்கி விட செய்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்நிலையில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் வட்டாச்சியர் பெருமாள் வருவாய் ஆய்வாளர் சத்தியபிரியா ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆசிரியை கலைவாணி என்பவர் தினமும் மாணவ மாணவிகளை கை கால்களை அமுக்கி விட சொல்வதாகவும் பெற்றோரிடம் கூறகூடாது என மாணவ மாணவிகளை மிரட்டுவதாகவும் கூறினர். கை, கால்களை அமுக்கி விட சொல்லும் பள்ளி ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
