வலிக்க வலிக்க சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.! கதறி துடித்த தொண்டர்கள்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் அடங்கிய எப்ஐஆர் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி திமுக நிர்வாகி எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாஜக சார்பாக அண்ணாபல்கலைக்கழகம் முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த எப்ஐஆர் வாக்குமூலம் வெளியானது. அதில் மாணவியின் பெயர், மொபைல் எண், வீட்டு முகவரி போன்றவை இடம்பிடித்திருந்து. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் வெளியில் தெரியக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில் எப்ஐஆர் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்ணாமலை கண்டனம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அதுவும் அந்த எப்ஐஆர் வெளியில் கசிந்துள்ளது. காவல்துறையின் தொடர்பு இல்லாமல் எப்ஐஆர் எப்படி வெளியே செல்ல முடியும்? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இன்று காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நின்று என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன் எனவும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என கூறியிருந்தார்.
சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
இந்தநிலையில் கோவையில் தனது வீட்டு முன்பு அண்ணாமலை பச்சை நிற வேஷ்டி அணிந்துகொண்டு சாட்டையால் 6 முறை சரமாரியாக அடித்துக்கொண்டார். வலியின் வேதனை முகத்தில் தெரிந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சாட்டையை சுழற்றி சுழற்றி அடித்தார். இதனை அருகில் இருந்த பார்த்த பாஜக தொண்டர்கள் கண்ணீர் வடித்ததனர். 6 முறை சாட்டையால் அடித்த பிறகு அண்ணாமலை அவரது தொண்டர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.