HC orders jawahirullah to surrender
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை சரணடையுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஜவஹிருல்லா சரணடைய ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருந்தார். அந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்ததால் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
