HC order against village panchayat

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடையை அமைத்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்கலாம் எனவும், மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால் செல்லாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி கிராமத்தைச் சேர்ந்த டி.விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மதுபான கடை திறந்தால், குடிகாரர்களால், பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் ஈனவும், விதிமுறைகள் அனைத்தையும் மீறி, இந்த பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கபட்டிருந்தது.

இதே கோரிக்கையுடன், பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் கோடை விடுமுறை கோர்ட்டில், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் உணர்வுகளுக்கு அரசு அதிகாரிகள் மதிப்பு அளிக்க வேண்டும் எனவும், மதுபான கடைகளை இடமாற்றவும், புதிய கடைகளை திறக்கவும் அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கபடுவதாகவும், தங்களது கிராமத்துக்குள் மதுபான கடை திறக்க கூடாது என்று கிராம சபைகளில் தீர்மானம் இயற்றப்பட்டால், அந்த கிராமங்களில் மதுபான கடைகளை திறக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடையை அமைத்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்கலாம் என தெரிவித்துள்ளது.

மதுக்கடைகளுக்கு எதிராக கிராம சபை தீர்மானம் நிறைவேற்றினால் செல்லாது எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.