பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதியை மீறி பேனர் வைக்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்தார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அப்போது, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அமித்ஷா வரவேற்பு பேனர்கள், பொதுமக்களுக்க இடையூறாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அப்போது சுட்டிக்காட்டினார். 

விதியை மீறி பேனர்கள் வைக்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தினார். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தமிழக அரசின் வழக்கறிஞர் பதிலளித்தார்.