தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மயிலாடு துறை வேட்பாளர் சுதா திடீர் மாற்றம்.! புதிய தலைவர் யார்.?
நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன் தினம் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் சுதா மாற்றப்பட்ட்டு அவருக்கு பதிலாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகிளா காங்கிரஸ் தலைவர் மாற்றம்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில்ல தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பழைய நிர்வாகிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த வழக்கறிஞர் சுதா மாற்றப்பட்டுள்ளார்.
புதிய தலைவர் யார்.?
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் மயிலாடுதுறை தொகுதியில் வழக்கறிஞர் சுதா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.