Have power money and want to have a meeting it was the hunger strike Ramarajan Speech

விழுப்புரம்

விழுப்புரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பதவி வேண்டும், பணம் வேண்டும் என விரும்பாத கூட்டமே இந்த போராட்டத்திற்கு வந்துள்ளது என்று நடிகர் ராமராஜன் பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்களை கண்டுபிடிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்,

சி.பி.ஐ. விசாரித்து உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மருத்துவர் லட்சுமணன் எம்.பி. தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ராஜேந்திரன் எம்.பி., முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவராஜ், அரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் முடித்து வைத்து பேசியது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது அவருடைய முகத்தை கூட காண்பிக்காததால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மக்கள் ஆதரவோடு இந்த போராட்டம் நடந்தது.

பதவி வேண்டும், பணம் வேண்டும் என விரும்பாத கூட்டமே இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்துள்ளது. மக்களுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அதனால்தான் இந்த போராட்டத்தில் மக்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

ஜெயலலிதாவினால் முதலமைச்சராக அங்கீகரிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பல அமைச்சர்களை ஜெயலலிதா மாற்றியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் ஒருமுறை கூட மாற்றவில்லை. அந்தளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துள்ளார்.

முன்பெல்லாம் நிறைய சினிமா நடிகர்களின் விளம்பர பதாகைகள்தான் இருக்கும். தற்போது எம்.எல்.ஏ.க்கள் ஊருக்குள் வரக்கூடாது என்ற விளம்பர பதாகைகள்தான் அதிகளவில் உள்ளது. எங்கு சென்றாலும் காவல் பாதுகாப்புடன்தான் எம்.எல்.ஏ.க்கள் செல்லும் நிலைமை உள்ளது.

இந்த போராட்டம் அறிவித்தவுடன் மருத்துவ அறிக்கைகளை முரணாக வெளியிட்டு மாற்றி, மாற்றி குழப்புகின்றனர். எனவே ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் விரைவில் உண்மை நிலை தெரியவரும்” என்று அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன், இணை செயலாளர்கள் செந்தில்குமார், முருகானந்தம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராம.சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன், நகர அவைத்தலைவர் அன்பழகன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் மணவாளன், வெங்கடபதி, புஷ்பலதா கோதண்டராமன், மல்லிகாமோகன், வக்கீல் அணி மாவட்ட துணை செயலாளர் தேவேந்திரன், மருத்துவ அணி துணை செயலாளர் தம்பித்துரை, நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, காணை ஒன்றிய முன்னாள் செயலாளர் ஸ்ரீதர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.