hanging in front of Prime Minister house ayyakannu and farmers Decided to disrupt Delhi
இராமநாதபுரம்
சுமார் 20 இலட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியே முடங்கும் வகையில் போராட்டம் மற்றும் பிரதமர் வீட்டு முன்பு தூக்கில் தொங்கும் போராட்டம் போன்றவற்றை நடத்த ஐயாக்கண்ணு மற்றும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
"மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடுக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்கள், நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இதுதொடர்பான துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.
இதன்பின்னர் இராமநாதபுரம் வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பின்னர் ஐயாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது:
"விவசாய விளைப் பொருட்களுக்கு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை, நதிகள் இணைப்பு நடைபெற வேண்டும். அதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் விரைவில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
சுமார் 20 இலட்சம் விவசாயிகளை திரட்டி டெல்லியே முடங்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும். மேலும், பிரதமர் வீட்டு முன்பு தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்துவோம்.
மத்திய - மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத ஒரே பிரதமர் மோடிதான்.
அண்ணா சொன்னதுபோல வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது.
வாக்குறுதிகளை காப்பாற்றும் தகுதி மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை" என்று அவர் கூறினார்.
