திருவள்ளூர்

திருவள்ளூரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 16-ஆம் தேதி  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். 

கடந்த சில நாள்களாக தேர்வு எழுதுபவர்களின் விவரங்களை குறிக்கும் முகப்புத் தாளுடன் விடைத்தாளை இணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட்டை அந்தந்த பள்ளிகளில் இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து வழங்கப்படுகிறது. 

இதில், மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி, கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செ. பழநிசேகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் ஏ.வெங்கடேசுவரலு வரவேற்றார். 

பு.வெ. முருகேசனார் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, முன்னாள் தலைமை ஆசிரியர் கே.பி.எஸ். விஸ்வநாதன் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பூபால நாயுடு, கங்காதரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.