கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்! அதிமுக முன்னாள் அமைச்சர்களை ரவுண்ட் கட்டப்போகும் சிபிஐ!
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியது.
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக ஆளுநரிடம் அனுமதி ஆணையை கோரியது.
சிபிஐயின் கோரிக்கையை மாநில அமைச்சரவை 2022ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த 14 மாதங்களாக இந்த கோரிக்கை தொடர்பாக எந்த பதிலும் கிடைக்கப் பெறாமல் கிடைப்பில் போடப்பட்டது. இதனால் இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஆண்டு நம்பவர் 13ம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சி.விஜயபாஸ்கர் மற்றும் ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ விசாரணை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கு மத்திய புலனாய்வு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும், ஒப்புதல் அளித்த கோப்புகள் சிபிஐ-யின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.