gundas law on husband wife gave petition to collector to stop ...

பெரம்பலூர்

கணவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவலாளர்கள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தக் கோரி அவரது மனைவி பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தாவிடம் மனு அளித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கமலம், தனது குழந்தைகளுடன் நேற்று ஆட்சியர் வே. சாந்தாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான எனது கணவர் பன்னீர்செல்வம், கடந்த 4-ஆம் தேதி குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக, அரசு சாராயக் கடையிலிருந்து 10 சாராய பாட்டில்களை வாங்கி வந்தார்.

அப்போது, மங்கலமேடு காவலாளர்கள் வழிமறித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவர் மீது கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக வழக்கு பதிந்து, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனது கணவர் காவலாளர்களால் கைது செய்யப்பட்ட நாள் முதல், அவரது தாய் அஞ்சலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு எனது கணவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.